fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கியின் மண்டல அலுவலகம்- நாமக்கல்லில் ராஜேஸ்குமார் எம்.பி...

தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கியின் மண்டல அலுவலகம்- நாமக்கல்லில் ராஜேஸ்குமார் எம்.பி திறந்துவைத்தார்

தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் நாமக்கல் மண்டல அலுவலகத்தை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் திறந்து வைத்தார்.

சென்னையைத் தலைமையிட மாகக் கொண்டு செயல்பட்டுவரும் தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (முன்னர் நிலவள வங்கி) மாநிலம் முழுவதும் 19-மண்டல அலுவலகங்கள் மற்றும் 6 நகைக் கடன் சேவை மையங் களுடன் செயல்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்திற்கான மண்டல அலுவலகம் சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு 20-வது மண்டல அலுவலகமாக, நாமக்கல் மண்டல தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் அலுவலகம் நாமக்கல் நகராட்சி, சேலம் சாலையில் அமைந்துள்ள எல்.எம்.ஆர்.(L.M.R) காம்ப்ளக்ஸ் முதல் தளத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மண்டல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நாமக்கல் மாவட்டத்திலுள்ள 7 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் மற்றும் கரூர் மாவட்டத்திலுள்ள 3 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் செயல்படவுள்ளன.

இதன் மூலமாக நாமக்கல் மாவட்ட பொது மக்களுக்கு கூடுதலாகவும் விரைவாகவும் வங்கிச்சேவை கிடைத்திடவும், நகைக் கடன் வழங்கவும், விவசாயிகளுக்கு பண்ணை சார்ந்த கடன்கள், கால்நடை வளர்ப்பு கடன்கள், டிராக்டர் கடன்கள் உள்ளிட்ட கடன்கள் வழங்கிடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவ்வங்கியில் பொதுமக்கள் தங்களது விலை உயர்ந்த பொருட் கள் மற்றும் உடைமைகளை வைப்பதற்கு பாதுகாப்பு பெட்டகம் வசதியும் உள்ளது.

நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களை சேர்ந்த 10 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளுக்கு நகை கடனுக்கு மறு நிதி வழங்குதல் உள்ளிட்ட பணிகள் இவ்வங்கியின் மூலம் மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் நாமக்கல் மண்டல அலுவலகத்தை எம்.பி. இராஜேஸ்குமார், குத்துவிளக்கேற்றி வைத்து, கடன் வங்கி சேவைகள், பரிமாற்றங்களை தொடங்கி வைத்தார். நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.

கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் த.செல்வக் குமரன், வங்கியின் துணைப் பொதுமேலாளர் மாதேசன், நாமக்கல் நகர் மன்றத் தலை வர் கலாநிதி, நகர்மன்ற துணைத் தலைவர் சே.பூபதி, நகர்மன்ற உறுப்பினர் சிவக்குமார், இரா சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கே.பி.ஜெகநாதன், அட்மா குழுத் தலைவர்கள் பழனிவேல், அசோக்குமார், நவலடி, பாலசுப்பரமணியம், மருத்துவர் .மாயவன், துணைப் பதிவாளர்கள் பெ.கர்ணன், கே. ஆர்.ஏ.விஜயகணபதி மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள், மண்டல மேலாளர் மற்றும் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிப் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img