சேலத்தில் சுயம்பு சுகவனேஸ்வரர் திருக்கோவில் திருக்குடமுழுக்கு பெருவிழா நேற்று (செப்.7) வெகு விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த திருக்கோவில் சுகவனேஸ்வரர் திருக்கோவில். கிரத யுகத்தில் தேவர்களின் பாவங்களைப் போக்கியதால் பாபநாசம் எனவும், திரேத யுகத்தில் காமதேனு பசு வழிப்பட்டதால் பட்டீஸ்வரம் எனவும், துவாபரயுகத்தில் ஆதிசேஷன் வழிபட்டதால் நாகேஸ்வரம் எனவும், கலியுகத்தின் சுகப்பிரம்மரிஷி வழிபட் டதால் சுகவனம் எனவும், இந்த திருக் கோயில் பெயர் பெற்றது.
இத்திருத்தலத்தில் இறைவன் சுயமாக உருவாகி சுகவனேஸ்வரர் எனும் திருநாமத்தோடும், இறைவி சொர்ணாம் பிகை எனும் திருநாமத்தோடும் பக்தர் களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.
இக்கோவிலில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு விழா நடைபெற்றது. தற்போது குடமுழக்கு விழாவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு பாலாலையம் செய்யப்பட்டு, ஒரு கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடமுழுக்கு விழா திருப்பணிகள் நடந்தன.
கடந்த ஒன்றாம் தேதி திருக்குடமுழுக்கு விழா தொடங்கியது.
நாள்தோறும் ஒன்றாம் காலம் இரண்டாம் காலம் மூன்றாம் காலம் என ஆறு கால பூஜைகள் நடைபெற்றன.
கும்பாபிஷேக விழா நாளான நேற்று அதிகாலை 4 மணி அளவில் விக்னேஷ்வர பூஜை புண்ணியாவாகனம், பஞ்சகவ்யம், சோமகும்ப பூஜை ஆறாம் கால பரிகார சுவாமிகளுக்கு யாக பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து மகா பூர்ணாஹூதி நடை பெற்றது. வேதங்கள் முழங்க குடமுழுக்கு தீர்த்த குடத்தை சுமந்தபடி ஊர் மக்கள் திருக்கோவில் பிரகாரத்தில் வலம் வந்து பின்னர் சுகவனேஸ்வரர் சுவாமியின் கோபுரத்தில் கலச தீர்த்தத்தை ஊற்றி கும் பாபிஷேகம் செய்தனர்.
சொர்ணாம்பிகை தாயார் சன்னதி கோபுரத்துக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அப்போது மூன்று கருட பகவான்கள் கோபுரத்தின் மேற்பகுதியில் பறந்து வந்தது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.
பின்னர் சுயம்பு லிங்கத்திற்கு தீர்த்தக்குட கலச நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து அலங்காரங்கள் செய்யப்பட்டு சுகவனேஸ்வரருக்கும், சொர்ணாம்பிகை தாயாருக்கும் அர்ச்சனை, மகா தீபா ராதனை காண்பிக்கப்பட்டது.
விழாவில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட ஆட்சியர் கார்மேகம், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.