fbpx
Homeதலையங்கம்சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

‘தைவான் மீது சீனா படையெடுக்கும் பட்சத்தில் தைவானை பாதுகாக்க சீனாவுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் களமிறக்கப்படும்‘ என்று அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்தார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் குவாட் உச்சி மாநாடு தொடங்கியது. இதில் கலந்துகொள்ள ஜப்பான் வந்துள்ள அமெரிக்க அதிபர் பைடன் டோக்கியோவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், ‘தைவான் மீது படையெடுத்தால் அமெரிக்கா ராணுவத்தை அனுப்புமா?’ என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அதிபர் பைடன், “சமீப காலமாக தைவானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை சீனா முடுக்கி விட்டுள்ளது. தைவானை வலுக்கட்டாயமாக கைப்பற்ற சீனா முயற்சிக்காது என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது.

அமெரிக்கா தைவானுக்கு வெளிப்படையான பாதுகாப்பு உத்தரவாதம் வழங்குவதைத் தவிர்த்து வருகிறது. அதனுடன் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் இல்லை என்ற போதிலும், தைவான் மீது சீனா படையெடுத்தால் அமெரிக்கா ராணுவ ரீதியாக தலையிடும்.

தைவானை பாதுகாக்க சீனாவுடன் போரிட அமெரிக்க ராணுவம் தயாராக உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு தைவானைப் பாதுகாக்கும் பொறுப்பு இன்னும் கூடியிருக்கிறது,” என்று கூறினார்.

தைவான் தனது நாட்டுப்பகுதி எனக் கூறிக் கொண்டிருக்கும் சீனா அந்த நாட்டை அவ்வப்போது சீண்டி வருகிறது. இந்நிலையில் தான் ஜோ பைடன், சீனாவை எச்சரித்து, தைவான் மீது போர் தொடுத்தால் அமெரிக்கா போரில் நேரடியாக இறங்கும் என அறிவித்து இருக்கிறார்.

இந்நிலையில் திபெத்தும் தனக்கே சொந்தம் என சீனா உரிமை கொண்டாடுவதோடு, இந்திய நிலப்பரப்பையும் ஆக்கிரமிக்கத் துடிக்கிறது.
இந்தப் போக்கில் இருந்து சீனா தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இல்லையெனில் அதற்கு பெரிய விலை கொடுக்க நேரிடும். அதற்கான எச்சரிக்கை மணியைத் தான் ஜோ பைடன் ஒலித்திருக்கிறார்.

சீனா காது கொடுத்து கேட்க வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img