கோவை சி.எஸ்.ஐ கிறிஸ்துநாதர் ஆலயத்தில் ஆலயத்தின் 25வது அசனப்பண்டிகை நேற்று (ஞாயிறு) கொண்டாடப்பட்டது. காலை 7 மணிக்கு நடைபெற்ற முதல் ஆராதனையில் சுமார் 3000 பேரும், காலை 9 மணிக்கு நடை பெற்ற இரண்டாவது ஆராதனையில் சுமார் 5000 பேரும் கலந்து கொண்டனர்.
முதல் ஆராதனையில் தலைமை போதகர் அருள் திரு.ராஜேந்திரக்குமார், இரண்டாவது ஆராதனையில் அருள்திரு. பிரின்ஸ் கால்வின் (செயலாளர் – கோவை பேராயம்) ஆகியோர் சிறப்பு ஆரா தனைகளில் செய்தி வழங்கினார்கள். இந்த ஆராதனைக்குப்பின் பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை அசனவிருந்து நடைபெற்றது.
அசனப்பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள உடல் ஊனமுற்றோர் இல்லம், முதியோர் இல்லம், அனாதை இல்லம் என 40 இல்லங்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
விருந்து உணவாக அரிசி சாதம், மட்டன் குழம்பு, சாம்பார், வாழைக்காய் கூட்டு, ரசம், பாயாசம் ஆகியவை பரிமாறப்பட்டது. ஒரே நேரத்தில் 1400 பேர் உணவு உண்ணும்படியாக பந்தியில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கான ஏற்பாடுகளை ஆலயத்தலைமை போதகர் அருள்திரு. ராஜேந்திரக்குமார், உதவி ஆயர்கள் அருள்திரு. சுரேஷ்குமார், அருள்திரு.பிரவின்ஜெபராஜ், ஆலய செயலாளர் ஜி.பாக்கிய செல்வன், ஆலய பொருளாளர் பி.காட்வின் கோயில், அசனகன்வீனர் ஜி.ஆல்வின் மற்றும் போதகர் சேகர குழு அங்கத்தினர்கள் டயோசீசன் குழு அங்கத்தினர்கள் ஜெ.ஏ.பரமானந்தம், ஜெ.பி.ஜேக்கப், எஸ்.என்.ஜேக்கப், ஜி. முத்துசெல்வன் மற்றும் ஜாஸ்மின் ஜாக்சன் ஆகியோர் செய்தனர்.