fbpx
Homeதலையங்கம்சமூக நீதிப்போரில் மகத்தான வெற்றி!

சமூக நீதிப்போரில் மகத்தான வெற்றி!

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது முதல்வர் மு.க.ஸ்டாலினின் சமூகநீதிப் போராட்டத்திற்குக் கிடைத்த மகத்தான வெற்றி என்றால் மிகையாகாது.

மத்திய தொகுப்புக்கு தரும் இடங்களில் 50 விழுக்காடு இடங்களை ஏற்கெனவே எம்.பி.பி.எஸ், எம்.டி, எம்.எஸ். படித்துவிட்டு, அரசு மருத்துவப் பணியில் தொலைதூர கிராமங்களில் சேவை செய்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பில் படிக்க ஆணையிடப்பட்டது. அதனை ஏற்காமல் 100 சதவிகித இடங்களையும் ஒன்றிய அரசே பறித்தது மட்டுமல்லாமல், அரசு மருத்துவப் பணி புரிந்தபோது, படிக்க விழைந்தவர்களின் விருப்பம் நிறைவேறும் வகையில், அவர்களுக்கு 50 விழுக்காடு ஒதுக்கிடாமல், 2017 முதல் முட்டுக்கட்டை போட்டது.

அன்றைய அ.தி.மு.க. அரசு இதனை எதிர்த்து போராடாமல் ஏனோதானோ போக்குடன் அந்த மாநில உரிமையை விட்டுவிட்ட நிலையில்தான், முதல்வர் மு.க.ஸ்டாலின், முந்தைய மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டில் பெற்ற வெற்றி போலவே, இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பிலும் அரசுப் பணி புரியும் மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, வெற்றி கண்டுள்ளார். இது ஓர் வரலாற்றுச் சாதனை.

இந்த சிறப்பான வெற்றிக்கு மூலகாரணமான முதலமைச்சருக்கும், வாதாடி பெற்ற வழக்குகறிஞர்களுக்கும் நமது பாராட்டும், வாழ்த்தும். சமூகநீதி வரலாற்றில் இது மேலும் ஒரு மைல் கல் ஆகும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, எனது நண்பர் கலைஞர், சமூக நீதியில் அக்கறை கொண்டு பெரும் முயற்சி எடுத்தார். அதேபோன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதில் முயற்சி எடுத்து வருகிறார். இது நல்ல முயற்சி, அவர் எடுத்து வரும் முயற்சி வெற்றி பெற எனது வாழ்த்துகள் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மனம் திறந்து பாராட்டி இருக்கிறார்.
சமூக நீதிப்போராட்டத்தில் அடுத்தடுத்து வெற்றிக்கனி பறித்து தமிழக மக்களுக்கு காணிக்கையாக்கி வருகிறார், மு.க.ஸ்டாலின். அடுத்து நீட் தேர்வுக்கும் முடிவுகட்டுவோம் என்று அவர் கங்கணம் கட்டி செயலாற்றி வருகிறார்.

வெற்றி மேல் வெற்றி வந்து சேரட்டும்!

படிக்க வேண்டும்

spot_img