கோவை மாவட்டத்தை தென்னிந்தியாவின் மிகச்சிறந்த தொழில் பகுதியாக மாற்றுவதற்கு பல நாட்டு முதலீட்டாளர்களும், பல மாநிலத்தின் முதலீட்டாளர்களும் கோவை வரவேண்டும் என்று இந்திய தொழில் வர்த்தக சபை கோவை தலைவர் பி. ஸ்ரீராமுலு அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் நிருபர்களிடம் கூறிய தாவது: தமிழகத்தின் மேற்கத்திய பகுதியான கோவை, பல தரப்பட்ட தொழில் கட்டமைப்புகள் கொண்ட பகுதியாகும்.
இன்ஜினியரிங், பஞ்சாலைகள், ஆடைகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், வாகனங்கள், கம்ப்யூட்டர் மற்றும் ஐடி நிறுவனங்கள், தங்க நகைகள் செய்தல் போன்ற பல விதமான தொழில் நிறுவனங்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் மாவட்டமாகும். ஆனால், கோவையின் கட்டமைப்பு வசதிகள் சரியாக பேணப்படவில்லை.
கோவையின் வளர்ச்சிக்கு குரல் கொடுக்கும் முதன்மையான நிறுவனமாக இந்திய தொழில் வர்த்தக சபை செயல்பட்டு வருகிறது. கோவை பகுதி இன்னும் சிறப்பாக வளர தொழில்முனை வோர் பல நாட்டிலிருந்து கோவைக்கு வந்து முதலீடு செய்ய வேண்டும்.
கோவை பகுதி தொழில் செய்வோருக்கும், வியாபாரம் செய்வோருக்கும் மிகச்சிறந்த சிறப்பிடமாக இருக்க, இந்திய தொழில் வர்த்தக சபை சில கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்திக் கொண்டிருக்கிறது.
உதாரணமாக கோவை விமானநிலைய விரிவாக்கம், கோவை மெட்ரோ, கோவை-சத்திக்கு 4 வழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் விரைவாக செயல்படாமல் இருக்கிறது.
இதனால் வளர்ச்சி தடைபடுவதுடன், வெளிநாட்டில் உள்ளவர்களும் மற்ற மாநிலத்தில் உள்ளவர்களும் இந்தப் பகுதிக்கு வந்து தொழில் தொடங்க தயக்கம் காட்டுகின்றனர்.
இந்தத் திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்பட்டால் கோவை பகுதி இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தின் மிகச்சிறந்த தொழில் நகரமாக மாறும்.
கோவை பகுதியை மிகச் சிறந்த தொழில் மற்றும் வியாபாரம் செய்யும் பகுதியாக மாற்ற வேண்டும். அதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.
அதற்கான முழு ஒத்துழைப்பும் தருவதற்கு தயாராக இருக்கிறோம். இவ்வாறு இந்திய தொழில் வர்த்தக சபைத் தலைவர் ஸ்ரீராமுலு தெரிவித்தார்.