கோவையில் ஜெர்மன் இந்தியா கூட்டு தொழில் வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் ஜெர்மனியில் உள்ள துரிங்கியா மாநிலம் மற்றும் கோவையை சேர்ந்த தொழில் அமைப்பினர் கலந்து கொண்டனர்.
இதில் ஜெர்மனியில் இருந்து தொழில் வர்த்தகர்கள் மற்றும் கல்வியளர்களை ஜெர்மனி, துரிங்கியா நகரின் அறிவியல் மற்றும் டிஜிட்டல் சொசைட்டி, துரிங்கியா நகர் பொருளாதார அமைச்சர் உல்வ்கேங் டிவென்சே மற்றும் சென்னை, ஜெர்மனி கான்சல் ஜெனரல் மிக்கேலா குச்லர் ஆகியோர் அழைத்து வந்தனர்.இந்த கருத்தரங்கின் துவக்க உரையை ஜெர்மன் – இந்தியன் ரவுண்ட் டேபிள் அமைப்பின் நிறுவனர் ராமசாமி ஆற்றினார்.
விழாவிற்கு வந்திருந்தவர்களை இந்த அமைப்பின் கோவை தலைவர் சந்திரசேகர் மற்றும் ஜெர்மன் – இந்தியன் ரவுண்ட் டேபிள், துரிங்கியா இன்டர்நேஷனல், தெற்கு ஆசியா அமைப்பின் தலைவர் பிரான்சிஸ்கா கின்டர்வாட்டர் ஆகியோர் வரவேற்றனர். கோவை ஜிடி குழுமங்களின் நிர்வாக இயக்குனர் ஜி.டி. ராஜ்குமார் இந்தியாவின் மேற்கு தமிழகத்தில் தொழில் செய்வது பற்றிய சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில்,
கோவையில் உள்ள தொழில் அமைப்பினர் இணைந்து செயல்பட வேண்டும். இங்குள்ள தொழிலாளிகளுக்கு பயிற்சி பட்டறைகள் ஏற்படுத்தி திறன் பயிற்சிகளை அளித்திட வேண்டும். அதே போல் கல்வி நிறுவனங்களும் தொழில் நிறுவனங்களும் ஒன்றினைந்து செயல்பட்டு மாணவர்கள் படிக்கும் போதே தொழில் நிறுவனங்களில் உள்ளவற்றை குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.தமிழகத்தில் அனைத்து தொழில் வளங்களும் உள்ளன,’’ என்றார்.
பெர்லினில் உள்ள துரிங்கியா நகரின் தலைவர் ரெய்மண்ட் கிரவோ மற்றும் துரிங்கியா இன்டர்நேஷனல் தெற்கு ஆசியா இயக்குனர் பிரான்சிஸ்கா கின்டர்வாட்டர் ஆகியோர் துரிங்கியா நகரில் உள்ள தொழில் வாய்ப்புகள் குறித்தும் துரிங்கியா நகரின் சிறப்பு மிக்க வரலாற்றை பற்றியும் கோவை தொழில் துறையினருக்கு விளக்கினார்கள்.
துரிங்கியா நகர் பொருளாதார அமைச்சர் உல்வ்கேங் டிவென்சே நிகழ்ச்சியில் பேசுகையில்,
‘‘இந்திய தொழில்முனைவோர்களை ஜெர்மனிக்கு அழைத்து செல்ல பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இரு நாட்டு தொழில் முனைவோர்களிடம் ஒத்துழைப்பை மட்டுமே எதிர்பார்க்கிறேன்.கோவையை போன்று துரிங்கியாவிலும் சிறு குறு தொழில்முனைவோர்கள் அதிகம் உள்ளனர். இந்தியாவில் திறமையான தொழில்முனைவோர்கள், சிறந்த பல்கலைக்கழகங்கள், மக்கள், மாணவர்கள் உள்ளனர்,’’ என்றார்.