fbpx
Homeதலையங்கம்குடியரசுத் தலைவர் தேர்தல் 2024-க்கு முன்னோட்டமா?

குடியரசுத் தலைவர் தேர்தல் 2024-க்கு முன்னோட்டமா?

நாட்டின் அடுத்த குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற ஜூலை மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, வேட்பாளர்கள் பெயர்களை ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் பரிசீலித்து வருகின்றன.

குடியரசு தலைவர் தேர்தலில் மக்களவை எம்.பி.க்கள் 543 பேர், மாநிலங்களவை எம்.பி.க்கள் 233 பேர், மாநிலங்களில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் 4,033 பேர் என மொத்தம் 4,809 பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்.

குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான வாக்கு மதிப்பு அடிப்படையில் குறைந்தது 51 சதவீதம் ஆதரவு தேவை. ஆனால், தற்போது பாஜக வசம் 50க்கும் குறைவான சதவீத ஆதரவே உள்ளது.

இதனால், நாடாளுமன்றத்தில் பெரிய கட்சிகளாக இருக்கும் மாநில கட்சிகளின் ஆதரவை பெற பாஜக முனைப்பு காட்டி வருகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு தேவையான ஆதரவு கிடைத்து விட்டால், தங்களுக்கு விருப்பமான நபரை குடியரசுத் தலைவராக்கி விடலாம் என்று கணக்கு போடுகிறது மத்திய பாஜக அரசு.

அதேசமயம், குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. பொது வேட்பாளரை தேர்வு செய்ய சோனியா காந்தி சம்மதம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பினோய் விஸ்வத் ஆகியோருடன் விவாதித்துள்ளார். அவர்களும் பொது வேட்பாளரை நிறுத்த ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளதாக தெரிவித்த கார்கே அதன்பின், பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆலோசனை நடத்தவுள்ளோம். அதன்பின் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றார்.

எப்படியாகிலும் மக்களவை, மாநிலங்களவை, மாநில சட்டப் சபைகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் வாக்குகளின் அடிப்படையில் பார்த்தால், பாஜகவின் பலம் அதிகமாக உள்ளது. அதனால், பாஜக முன்னிறுத்தும் குடியரசு தலைவர் வேட்பாளரே வெற்றிபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசு தலைவர் பதவிக்கான பொதுவேட்பாளர் நிறுத்தப்படும் பட்சத்தில், அதற்கு ஆளும் பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகளின் ஆதரவு முழுமையாகக் கிடைத்தால், குடியரசு தலைவர் தேர்தல் என்பது கடுமையான போட்டிக்கு வாய்ப்பளிக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.

இந்தச் சூழலில், அடுத்த குடியரசுத் தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜக வேட்பாளர் யார், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

குடியரசு தலைவர் தேர்தலில் இரு வேட்பாளர்கள் மோதும் நிலை உருவாகி, அதில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் தோற்றாலும் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால் அதுவே பெரிய வெற்றிக்கு சமம் எனவும் கருதப்படுகிறது.

அப்படி நடந்தால் அதுவே, 2024 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த முன்னோட்டமாக இருக்கும், எதிர்க்கட்சிகளின் வியூகம் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தும் என்பதே அரசியல் விமர்சகர்களால் கணிப்பாக உள்ளது.

இந்த அரசியல் ஒருபுறமிருக்க, குடியரசுத் தலைவர் நாற்காலியில் அதற்கு சகலமும் பொருத்தமான, ஆட்சியாளர்கள் தவறு செய்யும்பட்சத்தில் தட்டிக்கேட்டு வழிநடத்தும் நடுநிலை சிந்தனை கொண்ட ஒருவர் அமர வேண்டும் என்பதே நாட்டு மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பு!

படிக்க வேண்டும்

spot_img