fbpx
Homeபிற செய்திகள்கிருஷ்ணகிரியில் மிலாடி நபி விழா: 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள்- மதியழகன் எம்எல்ஏ வழங்கினார்

கிருஷ்ணகிரியில் மிலாடி நபி விழா: 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள்- மதியழகன் எம்எல்ஏ வழங்கினார்

கிருஷ்ணகிரியில் நடந்த மிலாடி நபி விழாவில் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் 2 ஆயிரம் பேருக்கு பிரியாணி விருந்து வழங்கும் நிகழ்ச்சியில் மதியழகன் எம்எல்ஏ., பங்கேற்றார்.

கிருஷ்ணகிரி பழையபேட்டை நவ்ஜவான் கமிட்டி மற்றும் மொஹல்லாவாசிகள் இணைந்து, அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்ற மிலாடி நபி விழாவை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு அஸ்ரப் அலி தலைமை வகித்தார். தமுமுக பொருளாளர் நூர்முகமத் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நிர்வாகிகள் சாதுல்லா, பாருக், ஜமால், மன்சூர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் முனீர் வரவேற்றார்.

இதில் சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பர்கூர் எம்எல்ஏ.வுமான மதியழகன் பங்கேற்று 500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: கிருஷ்ணகிரியில் அனைத்து சமூகத்தினரும் ஒன்று சேர்ந்து நடத்தும் மிலாடி நபி சிறப்பு வாய்ந்தது. நபிகள் நாயகம், மதம் மற்றும் சமூக அடிப்படைகளை பார்க்காமல் ஏழை, எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என்ற உன்னத கருத்தை கூறியுள்ளார்.

அதை பின்பற்றினாலே, கலவரங்கள், சண்டை சச்சரவுகள் இன்றி அமைதியாக வாழ முடியும். அதைதான் ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணலாம் என அண்ணாவும் கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரியில் இன்று நடக்கும் இந்த நிகழ்ச்சியில் அனைத்து சமூகத்தினரும் சகோதரத்துவத்துடன் பங்கேற்றது மகிழ்ச்சியளிக்கிறது.

இது போல் தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். திமுக ஆட்சியில் மக்களின் ஒற்றுமை பலத்தை நிரூபிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், 2 ஆயிரம் பேருக்கு பிரியாணி விருந்து வழங்கும் நிகழ்ச்சியினை திமுக மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில், பழையபேட்டை சுன்னத் ஜமாத் கமிட்டி தலைவர் ஹலால் ஜாவித், செயலாளர் அஸ்கர், துணை செயலாளர் ஹபீப், உறுப்பினர்கள் இம்தாத், நவாஸ், சிராஜ் ஆகியோருடன், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, நகர்மன்ற துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, ஒன்றிய செயலாளர் கோவிந்தன், காவேரிப்பட்டணம் பேரூர் செயலாளர் பாபு, நகராட்சி கவுன்சிலர்கள் சுதா சந்தோஷ், வேலுமணி, பாலாஜி, செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். கவுன்சிலர் முகமது அலி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img