Homeதலையங்கம்காங். சிந்தனை அமர்வும் வித்திட்ட காமராசரும்!

காங். சிந்தனை அமர்வும் வித்திட்ட காமராசரும்!

காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் நடைபெற்ற சிந்தனை அமர்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகள் முதுபெரும் தலைவர் காமராசர் 1960களில் கொண்டு வந்த கே-பிளானின் மறு பிரதியாகவே பார்க்கப்படுகிறது.

கே-பிளானுக்கும், சிந்தனை அமர்வுக்கும் உள்ள ஒற்றுமைகள் என்ன? தாம் கொண்டுவந்த ‘கே-பிளான்’ திட்டத்தை சாத்தியமாக்க ஒன்பது ஆண்டுகளாக வகித்துக்கொண்டிருந்த தமிழக முதலமைச்சர் பதவியை பக்தவச்சலத்திடம் விட்டுக்கொடுத்தார்.

லால்பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், எஸ்.கே.பாட்டீல், ஜெகஜீவன்ராம் போன்றோர் கே-பிளானை மனதார ஏற்றுக்கொண்டு பதவி துறந்தவர்களில் முக்கியமானவர்கள்.

பெரும் புரட்சியாக பார்க்கப்பட்ட அந்த கே-பிளான் காரணமாக இந்தியாவின் பல லட்சம் இளைஞர்கள் ஆர்வத்துடன் காங்கிரஸில் இணைந்தனர்.

உண்மையில் 1960-களுக்கு பிறகு அகில இந்திய அளவில் காங்கிரஸிற்கு பல நெருக்கடிகள் உருவாகியபோதும் கட்சி உயிர்ப்போடு இருந்ததற்கு காரணம் கே-பிளான் தான் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

எவரெஸ்ட் சிகரம் போல் உலகமே திரும்பி பார்க்க வேண்டிய காங்கிரஸ் கட்சியின் நிலையோ இன்று கேள்விக்குறியாக உள்ளது. கோஷ்டி பூசல் ஒரு பக்கம் என்றால், கல்லறை செல்லும் வரை தமது பதவிகளை இளைய தலைமுறையினருக்கு விட்டுக் கொடுக்க மனமில்லாத தலைவர்கள் போன்றவைகள்தான் இன்றைய காங்கிரசின் பெரும் சரிவிற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் விலைவாசி உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை கடும் உயர்வு, பணமதிப்பிழப்பினால் நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் சரிவு, வேலை வாய்ப்பின்மை இப்படி எண்ணற்ற பிரச்சனைகள் உள்ளன.

அதற்கு காரணமான மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவை மக்கள் முன் தோலுரித்து காட்ட வேண்டிய காங்கிரசோ பரிதாப நிலையில் உள்ளது. இதனையெல்லாம் மனதில் வைத்துதான் சிந்தனை அமர்வு என்ற கூட்டத்தை மூன்று நாட்கள் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் காங்கிரஸ் கட்சி நடத்தியது.

இதில் விவாதிக்கப்பட்ட விவகாரங்களில் முக்கியமானது இளைய தலைமுறையினர் காங்கிரஸ் பக்கம் ஈர்க்க வேண்டுமென்றால், 50 வயதிற்கு குறைவானவர்களுக்கு தேர்தலில் போட்டியிட 50 சதவீத இடங்களை ஒதுக்குவது என்பதாகும்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு ஓய்வு அளிப்பது போன்றவையாகும். இவை எல்லாமே கே-பிளானில் அன்று காமராசர் வகுத்த திட்டம் போல் உள்ளது என்பதே நிதர்சன உண்மையாகும்.

இந்த சிந்தனை அமர்வு மாநாட்டில், காங்கிரஸ் கட்சியில் ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என்று விதி அமல்படுத்தப்படும் என்று அறிவித்து இருப்பது பல்வேறு தரப்பில் இருந்து வரவேற்பை பெற்றுள்ளது.

இதுபோன்ற தீர்மானங்களை நிறைவேற்றுவது பெரிதல்ல. அவற்றை நடைமுறைப்படுத்தும் விதமாக காமராசர் போல் தலைவர்கள் தங்களது பதவிகளை துறக்க முன் வர வேண்டும். அதுவே இளைய தலைமுறையினர் காங்கிரஸ் கட்சியில் இணைய உந்து சக்தியாக அமையும்.

வெற்று காகிதங்களில் எழுதப்படும் தீர்மானங்களுக்கு அக்கட்சி தலைவர்கள் உயிர் கொடுப்பார்களா?

பொறுத்திருந்து பார்ப்போம்!

படிக்க வேண்டும்

spot_img