fbpx
Homeதலையங்கம்கரு முட்டை தானம்; முறைகேடு தடுப்போம்!

கரு முட்டை தானம்; முறைகேடு தடுப்போம்!

ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செயற்கை கருவூட்டலுக்காக 16 வயது சிறுமியின் கரு முட்டைகள் தானமாக பெறப்பட்டதாகவும், சட்டத்துக்கு புறம்பாக இந்த கருமுட்டை விற்பனை நடந்ததாகவும் புகார்கள் வந்தன. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக சிறுமியின் தாயார், தாயாரின் 2-வது கணவர், புரோக்கர் மற்றும் போலி ஆதார் அட்டை வழங்கியவர் என 4 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து பல கட்ட விசாரணைகள் நடந்து வருகிறது.

தமிழ்நாடு அரசு சார்பில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை சார்பிலும் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் இந்த கருமுட்டை தானம் தொடர்பான வழக்கு, மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கான வழிகாட்டு முறைகள் இருக்கின்றனவா, அது முறையாக செயல்படுத்தப்படுகின்றனவா என்ற முழுவிவரங்கள் யாருக்கும் தெரியவில்லை. இந்த விவகாரத்தில் காவல்துறையும், மருத்துவத்துறையும் நல்ல முறையான விசாரணை நடத்தி வருகிறது.

ஆதார் அட்டையை போலியாக வழங்கி கருமுட்டை விற்பனை செய்து இருக்கிறார்கள். ஆஸ்பத்திரி நிர்வாகம் ஆதார் அட்டையை ஆவணமாக கொண்டு செயல்பட்டு இருக்கிறார்கள். ஆதார் அட்டை, அரசால் வழங்கப்படுவது.

எனவே அதன் உண்மை தன்மையை பரிசோதனை செய்யும் வசதி ஆஸ்பத்திரிகளிடத்தில் இல்லை. பெரும்பாலும் அதை யாரும் சரிபார்ப்பதும் இல்லை.

எனவே, கருமுட்டைதானம் தொடர்பாக முறையான வழிகாட்டி நெறி முறைகளை வகுக்க வேண்டும். எனவே வருங்காலத்தில் மக்களும், மருத்துவமனைகளும் பாதிக்கப்படாமல் இருக்க, சட்டத்துக்கு புறம்பான விஷயங்கள் நடப்பதை தடுக்க முறையான வழிகாட்டு முறை தேவை. கருமுட்டை தானத்தை யார் செய்ய வேண்டும்.

எப்போது வழங்கவேண்டும். எப்படி வழங்க வேண்டும் என்ற விதிமுறைகள் சரியாக வகுக்கப்பட வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கமும் வலியுறுத்தி உள்ளது.

உடல் உறுப்புதானம், ரத்த தான வங்கிகள் இருப்பதுபோன்று அரசே முறையான வழிகாட்டுதல்களுடன் கருமுட்டைதான வங்கிகள் உருவாக்கினால் முறைகேடுகள் நடப்பது தடுக்கப்படும்.

கருமுட்டை தானத்தில் எந்த அளவு முறைகேடுகள் நடந்துள்ளது? அதன் உண்மைத் தன்மை என்ன? என்பதை விசாரணை வெளிப்படுத்தும். அதோடு அடுத்தகட்ட அரசு நடவடிக்கைகளும் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img