திருச்சி அப்போலோ மருத்துவமனையில் ராஜாராஜ சோழன் (42) என்ற வேளாண்மை கல்லூரியின் முதல்வர் வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக வந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர் செந்தூரன் அவருக்கு கணையத்தில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டு அவை அழுகியுள்ளதை கண்டுபிடித்தார்.
இதையடுத்து அவருக்கு பெர்குடானியஸ் எண்டோஸ்கோபிக் நெக்ரோசென்டோமி என்று சொல்லக்கூடிய நுண்துளை அறுவைசிகிச்சை செய்து அவரது உயிரை காப்பாற்றி உள்ளார்.
சென்னையை அடுத்து, திருச்சியில் முதல் முறையாக இந்த அறுவை சிகிச்சையானது செய்து இந்த மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இதுக்குறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவர் செந்தூரன் கூறியதாவது: மனித உடலில் மிகவும் முக்கியமான பகுதி என்றால் அது கணையம் தான். நாம் சாப்பிடும் உணவு செரிமானம் ஆக அவற்றில் இருந்து சுரக்கும் திரவம் தான் நமது உணவு பொருளை செரிமானம் அடைய வைக்கிறது.
அதேபோல் இந்த கணையத்தில் இருந்து தான் இன்சுலின் சுரக்கிறது. பெரும்பாலும் இந்த கணையம் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கு காரணம் மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது பாதிப்படைய செய்யும்.
இந்த கணைய பாதிப்பு என்பது பெரும்பாலும் 30 முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு அதிகம் வருகிறது. பொதுவாக சிறுநீரகம் தான் செயலிழந்து போகும் என்று சொல்வார்கள். ஆனால் அதிக அளவில் பாதிப்பை சந்திப்பது இந்த கணையம் தான்.
இதில் வயிற்றை கிழித்து அதன் மூலம் அறுவை கிசிச்சை செய்வது என்பது ஒரு முறை இதில் நோயாளி இறந்துபோவதற்கான சாத்தியம் 40 சதவீதம் உள்ளது. அதேபோல் ஸ்கோப்பி மூலம் தொண்டைகுழி வழியாக கருவிகளை உள்ளே செலுத்தி அறுவை சிகிச்சை செய்வார்கள்.
ஆனால் தற்போது முதல் முறையாக பெர்குடானியஸ் எண்டோஸ்கோபிக் நெக்ரோசென்டோமி மூலம் திருச்சி அப்போலோ மருத்துவமனையில் இந்த நுண்துளை அறுவை சிகிச்சையை செய்திருக்கிறோம். இந்த அறுவை சிகிச்சையில் அதிகளவில் பாதிப்பு கிடையாது.
ஒரு 9மிமீ அளவில் உள்ள ஒரு கருவியை சிறு துளை வழியாக உள்ளே செலுத்தி உடலின் எந்த பாகத்தில் இருந்தாலும் ஊடுருவி செல்லும் அளவில் தான் இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்களிடம் வந்த நோயாளிக்கு கணையம் முழுவதும் பாதிப்படைந்து, அழுகி, சீழ் வைத்த நிலையில் தான் வந்தார்,
முதலில் அவருக்கு வயிற்று பகுதியில் ஒரு சிறு துளையிட்டு அதில் குழாயை அனுப்பி உள்ளே இருந்த கெட்ட நீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, நுண்துளை அறுவை சிகிச்சை செய்தோம். இதை ஒரே நேரத்தில் செய்ய முடியாது.
3 அல்லது 4 முறை காத்திருந்து பொறுமையாக அகற்ற வேண்டிய அவசியம் உள்ளது. இந்த கணைய பாதிப்பால் வருபவர்கள் சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைய 1 வருட காலமாகும்.
அறுவைசிகிச்சைக்கு பின் 6 முதல் 7 மாதங்கள் வரை அவர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அதன்பிறகு ஒரு 6 மாதம் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
இந்த நுண்துளை சிகிச்சை முறையானது இதற்கு முன் கொச்சின், ஐதராபாத் போன்ற பெரும் நகரங்களுக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் தற்போது சென்னையில் இந்த சிகிச்சை முறை உள்ளது. அதற்கு பின் முதல்முறையாக திருச்சியில் தான் இந்த சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நுண்துளை சிகிச்சையில் மருத்துவர்களாகிய நானும் (செந்தூரன்), அழகப்பன், கார்த்திக், பரணி, விக்னேஷ் உள்ளிட்ட மருத்துவர்களும் இணைந்து இந்த சிகிச்சையை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மருத்துவமனையின் சிஇஓ நீலகண்ணன், அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்த மருத்துவர்கள் உடனிருந்தனர்.