fbpx
Homeதலையங்கம்கச்சத்தீவில் இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை!

கச்சத்தீவில் இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை!

தமிழக மீனவர்களை கைது செய்வதும் அவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்வதும் கைதானவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் போராடுவதும் காலங்காலமாக நடந்து வருகிறது.

மீனவர்களை விடுவித்தாலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான படகுகளை இலங்கை அரசு திருப்பித் தருவதில்லை.

இந்த தீராத பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே தமிழக மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்து வருகிறது.

இந்த சூழலில் பிரதமர் மோடி, விரைவில் இலங்கை செல்லவிருக்கிறார். அப்போது தமிழக மீனவர் பிரச்சினை குறித்தும் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தமிழக மீனவர்களுக்கு புதியதோர் நம்பிக்கையை தந்துள்ளது.

அதற்கு முன்னோட்டமாக கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவின் போது அங்கு இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினை குறித்து நட்பு ரீதியிலான கலந்துரையாடல் ஒன்று இரண்டு தரப்புக்கும் இடையே நேற்று நடைபெற்றது.

தமிழக – இலங்கை மீனவர் சங்கப்பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.
பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.

இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதோடு, மீனவர்களை நல்லிணக்க அடிப்படையில் விடுதலை செய்யும் இலங்கை அரசு, விசைப்படகை அரசுடைமையாக்கி உத்தரவிடுவதால் படகு உரிமையாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

எனவே உடனடியாக படகுகளை விடுவிக்கவேண்டும் என்று தமிழக மீனவர்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதற்கு இலங்கை மீனவர்கள் இழுவை மடி மீன்பிடி முறையைக் கைவிட்டுவிட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள இந்திய- இலங்கை மீனவர் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்தியா, இலங்கை அரசுகளிடம் பேசி வருகின்ற மே மாதத்தில் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை கொழும்பில் நடத்துவது குறித்து அந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

பிரச்சினைக்கு தீர்வு காண இது ஒரு நல்ல தொடக்கமாக தெரிகிறது. பிரதமர் மோடியும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழக மீனவர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கட்டும்!

படிக்க வேண்டும்

spot_img