ஈமு கோழி மோசடி வழக்கில் உரிமையாளர்கள் இருவருக்கு தலா பத்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஆர்.கே ஈமு கோழி பண்ணை செயல்பட்டு வந்தது.
இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் கண்ணுசாமி, மோகனசுந்தரம் இவர்கள் ஈமு கோழி வளர்ப்பு தொடர்பாக கவர்ச்சியான விளம்பரங்களையும், முதலீடு திட்டங்களையும் அறிவித்தனர்.
இதை நம்பி 110 முதலீட்டாளர்கள் ரூபாய் 2.40 கோடி முதலீடு செய்தனர். ஆனால் உறுதியளித்தபடி முதலீட்டுத் தொகையை திருப்பி அளிக்கப்படவில்லை.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஈரோடு மாவட்டம் பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில் கண்ணுசாமி, மோகனசுந்தரம் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 1.21 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இருதரப்பு வாதத்தையும் விசாரிக்காமல் தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும், எனவே இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்த வேண்டும் எனவும் கண்ணுசாமி, மோகனசுந்தரம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்த உத்தரவிட்டது. இதன்படி மறு விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
கண்ணுசாமி, மோகன சுந்தரம் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக் கப்பட்டதால் அவர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூபாய் 2.42 கோடி அபராதமும் விதித்து நீதிபதி ஏ.எஸ். ரவி தீர்ப்பளித்தார்.
விசாரணைக்கு இருவரும் ஆஜராகாததால் அவர்களுக்கு பிடி ஆணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.