உணவு இல்லாமல் யாரும் உயிர் வாழ முடியாது. விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலையின்மை, பணத் தட்டுப்பாடு, விவசாயம் பாதிப்பு என பல காரணிகளால் உணவுபொருட்கள் கிடைப்பது அரிதாகிவிடுமோ என்ற அச்சங்களுக்கு மத்தியில் பலர் உணவு இல்லாமல் இறப்பது கவலை தரும் விஷயம் என்று சொல்கிறோம்.
அதுமட்டுமல்ல, ஏழை நாடுகளில் பலர் இரு வேளை கூட திருப்தியாக உண்ண முடிவதில்லை என்ற நிலையும் உள்ளது. ஆனால், உணவை வீணடிப்பது என்ற விஷயத்தை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்பதை நிரூபிக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் உணவு வீணடிக்கும் போக்கு இருந்தாலும், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு இந்தியர், 50 கிலோ உணவை வீணாக்குகிறார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்; இது தான் உண்மை. புள்ளிவிவரங்கள் ஆச்சரியத்தை மட்டுமல்ல அதிர்ச்சியையும் அளிக்கிறது.
இது உணவை வீணடிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை இரண்டாவது இடத்தில் வைத்திருக்கிறது என்பது மிகவும் எதிர்மறையான விஷயம்.
ஐக்கிய நாடுகளின் உணவுக் கழிவுக் குறியீட்டு அறிக்கை 2021 இன் படி, இந்தியாவில் வீணாகும் உணவில் 61 சதவீதம் நமது சமையலறையிலே நடைபெறுகிறது என்பது அதிர்ச்சியளிக்கலாம். மும்பையில் தினமும் 69 லட்சம் கிலோ உணவுப் பொருட்கள் உண்ணாமல் தூக்கி எறியப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
உணவை வீணாக்குவதில் முதலிடத்தில் உள்ள நாடு சீனா. இங்கு ஒவ்வொரு ஆண்டும் 91 மில்லியன் டன் உணவு விரயம் ஆகிறது. உணவை வீணடிப்பதன் தாக்கம், தார்மீக ரீதியில் மட்டுமல்ல, சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் கேள்விக்குறியை ஏற்படுத்துகிறது.
அதாவது மக்கள்தொகை எண்ணிக்கைப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் நாடுகளே, உணவை வீணாக்கும் பட்டியலிலும் அதே வரிசையில் இடம் பிடித்துள்ளன.
கலாச்சார பாரம்பரியம் உள்ள இந்தியா மற்றும் சீனாவில் விருந்தோம்பலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும் உணவு விரயத்தில் ஒரு முக்கிய காரணியாக இருக்கலாம். அதிக உணவு பொருட்களை சமைப்பது, பல வகை உணவுகளை ஒரே நேரத்திற்கு சமைப்பது என்பது போன்ற விஷயங்களும், உணவு விரயத்திற்கு காரணமாக இருக்கிறதோ என்று தோன்றுகிறது.
எல்லா காலக்கட்டத்திலும் உலகின் எங்கோ ஒரு நாட்டில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடிக் கொண்டுதான் இருக்கும். குறிப்பாக பசியால் குழந்தைகள் துடித்துக் கொண்டிருப்பதையும் கேள்விப்படுகிறோம்.
வீணாகும் உணவுகள் இல்லாதவர்களுக்குப் போய்ச் சேர வேண்டும். இவற்றைத் தவிர, விவசாய பொருட்களை கொண்டு செல்வது, பொருட்கள் அழுகிப் போவது, விரயமாவது என பல வழிகளில் விரயமாகும் உணவுப் பொருட்கள், மக்களின் வயிற்றுக்கு சென்றால் பட்டினிச்சாவு என்ற வார்த்தையே வீணாகிவிடும்.
முதலில் உணவை வீணாக்குவதை நாம் முற்றிலும் தவிர்க்க வேண்டியது மிகமிக அவசியம்!