தேனி மாவட்டத்தில் ‘இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் – 48’ திட்டத்தின் கீழ் இதுவரை விபத்தில் காயமடைந்த 3,673 பேர் அங்கீகரிக்கப்பட்ட 9 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் காயமடைந்த 3,084 பேருக்கு ரூ.1,86,76,095/- மதிப்பிலான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் நலனை பாதுகாக்கும் வகையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் ‘மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்’, ‘கலைஞரின் வரும் முன் காப்போம்’ திட்டம் போன்ற மருத்துவம் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
உயிர் காப்பான் தோழன் என்ற தோழமை எண்ணத்தை அடிப்படையாக கொண்டு, சாலை விபத்தில் உயிரிழப்புகளை தடுத்தல், முக்கிய அங்கமாக, சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசே மேற்கொள்ளும் வகையில் ‘இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48’-என்ற திட்டத்தினை தொடங்கி வைத்து, செயல்படுத்தி வருகிறார் முதல்வர்.
வருமான வரம்பு இல்லை
முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வெளிநாட்டவர் என அனைவருக்கும் வருமான வரம்பு ஏதும் கணக்கில் கொள்ளாமல், சாலை விபத்துகளில் காயமடைவோருக்கு முதல் 48மணி நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளித்திடவும், தேர்ந்தெடுக்கப்பட்ட 81 மருத்துவச் சிகிச்சை முறைகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வரை செலவினத்தில் (Ceiling Limit) சிகிச்சை, சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் மருத்துவமனையிலேயே 48 மணி நேரம் வரை அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறைகளில் (81 Treatment Packages) சிகிச்சை அளித்திடும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கட்டணமில்லா சிகிச்சை
இத்திட்டத்தில், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர் நிலையற்றவராக (Unstable) இருந்தால் அல்லது தொடர் சிகிச்சை நடைமுறைகள் தேவைப்பட்டால், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளியாக இருந்தால், நோயாளி மேற்கொள்ளும் சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்தால், நோயாளியை நிலைப்படுத்தி அந்த மருத்துவமனையிலேயே மேலும் சிகிச்சை தொடர்ந்து அளித்திடும் வகையிலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளிகளாக இல்லாமல் இருந்தால், நோயாளி மேற்கொள்ளும் சிகிச்சை காப்பீட்டுத் திட்டத்தில் இல்லை என்றால் நோயாளியை நிலைப்படுத்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சையை கட்டணமில்லாமல் தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர் அரசு மருத்துவமனைக்கு செல்ல தயாராக இல்லை என்றாலோ (அல்லது) தனியார் காப்பீட்டிலோ (அல்லது) பணம் செலுத்தியோ சிகிச்சை பெற விரும்பினால் நோயாளியை நிலைப்படுத்தி போதுமான மருத்துவ வசதி இருப்பின் அதே மருத்துவமனையிலோ அல்லது அவர் தேர்ந்தெடுக்கும் பிற மருத்துவமனையிலோ கிசிச்சைக்கான கட்டணத் தொகையினை தனிநபரே செலுத்தி சிகிச்சையைத் தொடரவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
9 மருத்துவமனைகள்
‘இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும்-48’ திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர், உத்தமபாளையம், சின்னமனூர் ஆகிய 6 அரசு மருத்துவமனைகள் மற்றும் தேனி கிருஷ்ணம்மாள் நினைவு மருத்துவமனை, தேனி வித்யா மருத்துவமனை, போடிநாயக்கனூர் தீபம் மருத்துவமனை ஆகிய 3 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 9 மருத்துவமனைகளில் உரிய தகுதியின் அடிப்படையில், இணைக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
‘இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் -48’ திட்டத்தின் கீழ், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 3,051 விபத்தில் காயமடைந்த 2549 பேர் அனுமதிக்கப்பட்டு, ரூ.1,78,39,969/- மதிப்பிலான மருத்துவ சிகிச்சைகளும், பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர், உத்தமபாளையம், சின்னமனூர் ஆகிய 5 அரசு மருத்துவமனைகளில் 609 விபத்தில் காயமடைந்த 527 பேருக்கு ரூ.7,00,780/- மதிப்பிலான மருத்துவ சிகிச்சைகளும், தேனி வித்யா மருத்துவமனை மற்றும் போடிநாயக்கனூர் தீபம் மருத்துவமனை ஆகிய 3 தனியார் மருத்துவமனைகளில் 13 விபத்தில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டு, 8 விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ.1,35,346/- மதிப்பிலான மருத்துவ சிகிச்சைகளும் என மொத்தம் 3,673 விபத்தில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டு, 3,084 விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ.1,86,76,095/- மதிப்பிலான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.
முதல்வரின் ‘இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் – 48’ திட்டத்தின் கீழ் விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வருபவர்களின் கருத்து:
“விலைமதிப்பற்ற உயிர்”
உத்தமபாளையம் வட்டம், கூடலூர் நகராட்சி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் குமார் கூறியதாவது: தினந்தோறும் கிடைக்ககூடிய வேலைகளை செய்து அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தினை பராமரித்து வருகிறேன்.
கடந்த சில தினங்களுக்கு முன் இரு சக்கர வாகனத்தில் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டு, கம்பம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டேன்.
‘இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் – 48’ திட்டத்தின் கீழ் போதிய சிகிச்சைகள் பெற்று வருகிறேன். இன்றைய நவீன காலகட்டத்தில் வாகனங்கள் இல்லாமல் ஒரு மனிதன் இயங்குவது கடினமான சூழ்நிலையாக உள்ளது.
இந்நிலையில் விபத்து என்பது சாதாரணமானதாக கருதாமல், எந்த ஒரு மனித உயிரும் விபத்தினால் பறிபோகக் கூடாது என்பதனை கருத்தில் கொண்டும், இத்திட்டத்தை செயல்படுத்தும் முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றார்.
சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவ ர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை அளித்திடும் வகையில் இன்னுயிர் ‘காப்போம் – நம்மைக் காக்கும் – 48’ திட்டத்தினை செயல்படுத்தி பிற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக தமிழக அரசு திகழ்ந்து வருகிறது என்பதே தேனி மாவட்டத்தைச் சார்ந்த ஏழை, எளிய மக்களின் கருத்து.
“துரிதமாக செயல்பட்ட மருத்துவர்கள்”
பெரியகுளம் வட்டம், ஜெயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் கூறியதாவது:
விவசாயக் கூலி வேலை செய்கிறேன். கடந்த சில தினங்களுக்கு முன் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகன விபத்து ஏற்பட்டு, பலத்த காயங்களுடன் இருந்த நிலையில், பெரியகுளம் அரசு மருத்துவமனையில் ‘இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் – 48’ திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டேன்.
எனக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை மருத்துவர்கள் உடனடியாக அளித்தனர். விபத்து என்பது எதிர்பாராமல் நடைபெறக் கூடியது. ஆனால் ஒரு மனிதனுக்கு ஏற்படும் துயரங்களை துடைத்திட வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு, ‘இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் – 48’ திட்டத்தினை செயல்படுத்தி வருகிற முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றார்.
தொகுப்பு:
சு.ஜெகவீரபாண்டியன்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
அ.இளையேந்திரன்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),
தேனி மாவட்டம்.