fbpx
Homeபிற செய்திகள்‘இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48” திட்டத்தில் இது வரை 2,994 பேருக்கு ரூ.2.7 கோடியில்...

‘இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48” திட்டத்தில் இது வரை 2,994 பேருக்கு ரூ.2.7 கோடியில் சிகிச்சை- திருச்சி பயனாளிகள் முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இது வரை 10 அரசு மருத்துவமனைகள் மற்றும் 23 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 33 மருத்துவமனைகளில் பல்வேறு பகுதிகளில் ‘இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48” திட்டத்தின் கீழ், சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்ட 2,994 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பயன்பெற்றுள்ளனர். இதற்காக அரசு செலவில் ரூபாய் 2.7 கோடியில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பினை தடுத்திடும் பொருட்டு தமிழ்நாடு முதல்வர் ‘இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48’ என்ற சிறப்பான திட்டத்தினை 18.12.2021 அன்று தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தினால், தமிழகத்தில் வசிப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகெங்கும் வசிக்கும் நபர்கள் தமிழகத்தின் ஏதேனும் ஒரு பகுதியில் சாலை விபத்து ஏற்பட்டாலும், இத்திட்டத்தின்கீழ் சிகிச்சை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதால், இத்திட்டம் இந்தியா மட்டுமல்ல உலகத்திற்கே ஒரு முன் மாதிரியான திட்டமாகத் திகழ்கிறது.

இத்திட்டத்தின் கீழ் சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அதற்கான செலவை தமிழ்நாடு அரசே மேற்கொள்ளும்.

தமிழ்நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட 215 அரசு மருத்துவமனைகள் மற்றும் 425 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 640 மருத்துவமனைகள் உரிய தகுதியின் அடிப்படையில் இணைக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைகள் வழங்கி வருகிறது. சாலை விபத்துகளில் காயமடைந்தோர்களுக்கு விபத்து ஏற்பட்ட 48 மணிநேரம் மிக முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

33 மருத்துவமனைகள்
இத்திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இது வரை 10 அரசு மருத்துவமனைகள் மற்றும் 23 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 33 மருத்துவமனைகளில் பல்வேறு பகுதிகளில் சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்ட 2,994 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பயன்பெற்றுள்ளனர். இதற்காக அரசு செலவில் ரூபாய் 2.7 கோடியில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

“இலவசமாக உயர்தர சிகிச்சை”
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற்ற சரவணன், த/பெ.மதுபாலன், தெரிவித்ததாவது:
நான் மணப்பாறை வட்டம், சொக்கலிங்கபுரம் கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது நன்பருடன் அருகில் உள்ள கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு திரும்பி வரும் வழியில், சாலை திருப்பத்தில் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது.

இதனால் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டு நிறைய இரத்தம் வழிந்தது. இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்-க்கு போன் செய்தவுடன் ஆம்புலன்ஸில் என்னை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உடனடி சிகிச்சை அளித்தார்கள்.

பின்னர், மருத்துவர்கள் எனக்கு ‘இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48’ திட்டத்தின்கீழ் அறுவை சிகிச்சை மேற்கொண்டு உயர்தர சிகிச்சையை இலவசமாக செய்து என்னைக் காப்பாற்றினார்கள்.

தற்போது, எனது உடல்நலம் முன்னேற்றம் அடைந்து நலமாக உள்ளேன். இத்திட்டத்தினை உருவாக்கித் தந்து, என்னைப் போன்ற ஏழை, எளியோர்களின் உயிர்காக்கும் முதலமைச்சர்க்கு என் நெஞ்சார்ந்த நன்றி என்றார்.

உடல் நலம் முன்னேற்றம்
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற்ற பழனிசாமி த/பெ.பொன்னுசாமி தெரிவித்ததாவது:
நான் திருச்சிராப்பள்ளி மாவட்டம், இனாம்புதூர் கிராமத்தில் வசித்து வருகிறேன். நான் இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து, சென்றபோது, எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் சாலையின் நடுவில் உள்ள தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானேன்.

அப்போது, அருகிலிருந்தவர்கள் என்னை மீட்டு 108 வாகனத்தின் வாயிலாக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனக்கு கை, கால்கள், தலை உள்ளிட்ட இடங்களில் காயங்கள் ஏற்பட்டன.

மருத்துவர்கள் எனக்கு சி.டி.ஸ்கேன், எக்ஸ்-ரே உள்ளிட்டவற்றை இலவசமாக எடுத்து, எனக்கு சிகிச்சை அளித்தனர். தற்போது, நலமுடன் உள்ளேன். நான் சிகிச்சை மேற்கொண்டபோது, சாலை விபத்தினால் பாதிக்கப்படுவோர்களுக்கான முதல்வரின் சிறப்பு திட்டமான ‘இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48’ திட்டத்தின் வாயிலாக சிகிச்சை அளித்ததாக மருத்துவர்கள் கூறினர்.

எதிர்பாராதவிதமாக ஏற்படும் விபத்துகளிலிருந்து ஏழை எளிய மக்களை காத்திடும் வகையில் செயல்படும் முதலமைச்சருக்கு எனது குடும்பத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

எதிர்பாராமல் நடக்கும் விபத்தினால் பாதிக்கப்படு வோருக்கு பயன்படும் விதமாக ‘நம்மைகாக்கும் 48” என்னும் இன்னுயிர் காக்கும் என்கிற மகத்தான திட்டத்தில் விபத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்கு சரியான நேரத்தில், சரியான சிகிச்சையும், விரைவான மருத்துவ சேவையும், முதலுதவி சிகிச்சையும் கிடைக்கப்பெற்று பல இன்னுயிர்கள் காக்கப்படுகின்றன. பல இன்னுயிர்களை காத்துவரும் முதலமைச்சருக்கு மக்கள் பெரிதும் நன்றி தெரிவிக்கின்றனர்.

தொகுப்பு:
த.செந்தில்குமார்,
உதவி இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
திருச்சிராப்பள்ளி மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img