பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் எதிர்க்கட்சிகளின் மாநில அரசுகளுக்கும் இடையேயான மோதல் தொடர் கதையாகி வருகிறது. இம்முறை கேரளாவில் ஆளுநர் ஆரிப்கானை வெளுவெளுவென வெளுத்துள்ளார் முதல்வர் பினராயி விஜயன்.
தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆளும் திமுக அரசுக்கும் இடையேயான முரண்பாடு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழக சட்டசபை நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு ஒப்புதல் தராமல் இருப்பதில் முன்னணி வகிப்பவர் ஆளுநர் ஆர்.என்.ரவி.
தெலுங்கானாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் முதல்வர் கேசிஆருக்கும் இடையே பகிரங்க மோதல் நடைபெற்று வருகிறது. ஆளுநர் உரை இல்லாமல் சட்டசபை கூட்டத்தை நடத்திய பெருமைக்குரியவராக மாறிவிட்டார் கேசிஆர். தெலுங்கானா அரசுக்கும் தமக்கும் இடையேயான மோதலை குமுறல் போல அண்மையில் தமிழிசை கொட்டி இருந்தார்.
புதுச்சேரியில் பாஜக கூட்டணி அரசுதான்.. ஆனாலும் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுடன் முதல்வருக்கு மோதல் போக்கே காணப்படுகிறது. சமீபத்தில் கூட திருவனந்தபுரத்தில் நடந்த தென் மண்டல மாநாட்டில் முதல்வர் ரங்கசாமிக்குப்பதில் தமிழிசை சௌந்தரராஜனே பங்கேற்றார்.
இதேநிலைமைதான் இடதுசாரிகள் ஆளும் கேரளாவிலும்… இம்மாநில ஆளுநரின் அதிகாரங்களை எப்படி எல்லாம் குறைக்க வழி இருக்கிறதோ அத்தனையையும் கையில் எடுத்தார் முதல்வர் பினராயி விஜயன். ஆனால் அசராத ஆளுநர் ஆரிப்கான் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியது பெரும் சர்ச்சையானது.
இப்போது ஆளுநர் ஆரிப்கானை கடுமையாக வசைபாடி இருக்கிறார் பினராயி விஜயன். பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமன உரிமையை மாநில அரசுக்கு தர முடியாது என்பது ஆரிப்கான் கருத்து. இது தொடர்பாக பினராயி விஜயன் கூறுகையில், மாநிலத்தின் ஆளுநர் ஆரிப்கான் பேசுவது முட்டாள்தனமாக உள்ளது.
அவர் வகிக்கும் அரசியல் சாசனப் பதவிக்கு சில பொறுப்பு உண்டு. பல விஷயங்களை முந்திக் கொண்டு ஊடகங்களில் சொல்லிவிடுகிறார் ஆளுநர். அவருக்கு மட்டும்தான் இப்படி எல்லாம் சொல்லும் திறமை இருக்கிறது என நினைக்கிறாரா? இந்தப் போக்கு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்பதை ஆரிப்கானுக்கு நினைவூட்ட வேண்டும் என காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் ஆளுநர் & முதல்வர் மோதல் என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. எல்லை மீறிவிட்டதால் இனி இந்த விவகாரத்தில் சமரசம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது.
இதற்கெல்லாம் மக்கள் மன்றம் தான் தீர்வு காணவேண்டும்!