fbpx
Homeதலையங்கம்ஆளுநரின் ‘ஓபன் டாக்’ - புரியாத புதிர் தானோ?

ஆளுநரின் ‘ஓபன் டாக்’ – புரியாத புதிர் தானோ?

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் மேகாலய மாநிலத்தின் ஆளுநராக சத்யபால் மாலிக் இருந்து வருகிறார். ஜனாதிபதியால் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டாலும் மத்திய அரசுடன் இணக்கமான போக்கையே ஆளுநர்கள் கையாள்வது வழக்கம்.

ஆனால், அதற்கு மாறாக ஆளுநர் சத்யபால் மாலிக் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசை சமீப காலமாக கடுமையாக விமர்சித்து வருகிறார்.

டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு வெளிப்படையாகவே சத்ய பால் மாலிக் ஆதரவு தெரிவித்து பேசினார். விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக பிரதமரை திமிர்பிடித்தவர் என விமர்சித்தார் என்ற புகாரும் எழுந்தது.

அதேபோல், அக்னிபாத் ஒரு தவறான திட்டம். இது ராணுவத்தின் கவுரவத்துக்கே எதிரானது. 4 ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரியும் அக்னி வீரர்களை திருமணம் செய்துகொள்ள யாரும் பெண் கொடுக்க மாட்டார்கள்.

அரசு பழைய நடைமுறைகளின் படியே ராணுவ ஆள்சேர்ப்பை நடத்த வேண்டும் என்றும் கடும் விமர்சனத்தை முன்வைத்தார் சத்யபால் மாலிக்.
இப்படி மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக வெளிப்படையாக பேசுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கும் ஆளுநர் சத்யபால் மாலிக், தற்போது வெளியிட்டு இருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

`மத்திய அரசுக்கு எதிராக பேசுவதை நான் நிறுத்தினால் துணை ஜனாதிபதி பொறுப்பு வழங்கப்படும் என்று எனக்கு சூசகமாக கூறப்பட்டது. ஆனால் நான் அதை செய்யவில்லை.

நான் என்ன நினைக்கிறேனோ அதையே பேசுகிறேன்’ என்றார்.
ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக மேகலாயா ஆளுநர் சத்யபால் மாலிக் இப்படி பகிரங்கமாக போர்க்கொடி தூக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இத்தனைக்கும் பிறகு சத்யபால் மாலிக் எப்படி ஆளுநராக நீடிக்க முடிகிறது? இவரது விவகாரத்தில் பிரதமரோ அமித்ஷாவோ… ஏன், இரண்டாம் கட்ட பாஜக தலைவர்கள் கூட வாயைத் திறக்காமல் மவுனம் காப்பதன் மர்மம் என்ன?

புரியாத புதிர் என்பது இது தானோ?

படிக்க வேண்டும்

spot_img