ஆன்லைன் சூதாட்டம் என்பது மக்கள் வாழ்வை சீர்குலைக்கிறது -உயிர்களைக் குடிக்கிறது. இதனை ஒழிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சட்டம் செய்தால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது சரியா? போட்டி அரசாங்கம் நடத்துகிறாரா ஆளுநர்?
கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட தற்கொலைகளில் குறிப்பிடத்தக்க இடம் பிடித்த தற்கொலைகளுக்கான மூலகாரணம் ‘ஆன்லைன் சூதாட்டம்‘ தான். இதனை தடை செய்யும் முயற்சியில் பல்வேறு கட்சியினரும் அமைப்பினரும் ஈடுபட்டனர்.
இவர்களின் கோரிக்கையை ஏற்று அதைத் தடை செய்தது முந்தைய அ.தி.மு.க. அரசு. அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்த கதையாக அதை அமல்படுத்திய நிலையில், உச்சநீதிமன்றம் அதன் சட்ட ஓட்டைகளைச் சுட்டி அச்சட்டத்தை செல்லாது என்று தீர்ப்புக் கொடுத்து விட்டது.
இந்த நிலையில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தை மீண்டும் வலுவான முறையில் இயற்றிட, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் சந்துருவைக் கொண்டு ஓர் ஆய்வுக் குழுவை நியமித்தார்.
அவரது பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு, அவசரச் சட்டம் இயற்றப்பட்டு, பிறகு அடுத்துக் கூடிய தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டத்தில் தடைக்கான தனி மசோதாவே ஒருமனதாக நிறை வேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது; அங்கு அது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அதனை இத்தனை காலமாக கிடப்பில் ஆளுநர் போட்டு வைத்துள்ளது எவ்வகையில் நியாயம்? இந்த மசோதாவையும் சேர்த்து 20 மசோதாக்கள் அவருடைய ராஜ்பவன் அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
ஆன்லைன் தடை சட்டம் எவ்வளவு முக்கியமானது. மக்களுக்குத் தேவையான சட்டம் என்பதை பாமரன் கூட அறிவான்.
அத்தகைய சட்டமசோதாவையே ஆளுனர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்திருக்கிறார் என்றால் மக்களுக்கான கடமையை நிறைவேற்றத் தவறுகிறார் என்பது தானே அர்த்தம்? அரசமைப்புச் சட்டப்படி அவருக்குரிய கடமையை அவர் செய்யத் தவறுகிறார் என்பது தானே பொருள்? மக்கள் நலன், உயிர் பாதுகாப்பு என்பதைக்கூட அவர் பார்க்க மறுப்பது அரசமைப்புச் சட்டப்படி குற்றமாகாதா? மக்களுக்காக பணியாற்றுவேன் என உறுதிமொழி எடுத்து ஆளுநர் பதவியேற்றதற்கு என்ன அர்த்தமோ தெரியவில்லை.
ஆளுநர் இப்படி நடந்து கொண்டால் தமிழகத்தில் மக்கள் திட்டங்கள் எப்படி நிறைவேற்ற முடியும். எப்படி வளர முடியும்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு எதிராக ஆளுநர்கள் போட்டி அரசியல் நடத்த உரிமையற்றவர்கள்.
இல்லாத அதிகாரத்தை இருப்பதாக எண்ணி செயலாற்றும் போட்டி அரசியலுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்று திரள வேண்டும்.
மக்கள் சிந்திக்கட்டும்!