கடலூர் மாவட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டு கருத்து கேட்டபோது, அவர்களிடம் அண்ணாமலை மிகவும் கடுமையாக நடந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “என்ன மரத்து மேல குரங்கு தாவுற மாதிரி எல்லாம் சுத்தி சுத்தி வரீங்க. என்ன இது? நான் சாப்பிட போகும்போது என்ன சொல்லிட்டு போனேன்.
மரியாதையாக நின்று நீங்க எல்லாம் சாப்பிடுங்க என்று சொல்லிவிட்டு போனேன். ஊர்ல நாய், பேய், சாராயம் விக்கிறவன் சொல்றதுக்கு எல்லாம் பதில் கேப்ப… அதுக்கெல்லாம் பதில் சொல்லணுமா நவுருங்க” என்று கடுமையாகப் பேசிவிட்டு புறப்பட்டார்.
அண்ணாமலையின் இந்த நடத்தைக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பத்திரிகையாளர் சங்கங்களும் தங்கள் கண்டனத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளன.
“கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தீபாவளி மதுவிற்பனை எண்ணிக்கை குறித்து பேசி விட்டு, இது தொடர்பாக என் மீது வேண்டுமானால் வழக்கு போடுங்கள் , பத்திரிகையாளர்களை மிரட்டாதீர்கள்” என்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறிவுரை கூறியிருந்தார்.
ஆனால், அடுத்த இரண்டு நாட்களுக்குள் கடலூரில் செய்தியாளர்கள் கேள்விகேட்க முயன்றபோது ஆத்திரமடைந்து பத்திரிகையாளர்கள் மீது தரக்குறைவாக விமர்சனம் செய்திருக்கிறார். அமைச்சர் செந்தில்பாலாஜி கூறிய கருத்துக்கு பதில் என்ன என்ற கேள்விக்கு நாய், பேய் சாராய வியாபாரிக்கு எல்லாம் பதில் கூறமுடியாது எனவும் ஆவேசப்பட்டிருக்கிறார்.
அவரது அரசியல் எதிர்வினைகள் குறித்து நாம் விமர்சிக்க வேண்டியதில்லை. ஆனால் அண்ணாமலை செய்தியாளர்கள் மீது ஆத்திரத்தை வெளிப்படுத்தி குரங்குகள் என்று தரக்குறைவான விமர்சனம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
உண்மையான பத்திரிகையாளர்கள், யாருக்கும் அடிமைகளும் இல்லை; கூலிகளும் இல்லை. தமிழகத்தில் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் அரசியல்வாதிகளால் அவமதிக்கப்படுவதும் மிரட்டப்படுவதும் அதிகரித்து வருவது வேதனைக்கு உரியது.
அண்ணாமலைக்கு பத்திரிகையாளர்களை விமர்சிப்பது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பும் இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என நடந்து கொண்டு இருக்கிறார். ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் இப்படி நடந்து கொள்வது கொஞ்சம் கூட சரியல்ல; அநாகரீகத்தின் உச்சமாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
தலைவரே இப்படி நடந்தால் தொண்டர்கள் எப்படி நடப்பார்கள்?
பொது வெளியில் இருப்பவர்கள் நிதானத்தைக் கடைபிடிக்கவேண்டியது மிகமிக அவசியம். அண்ணாமலை தமது வார்த்தைகளுக்கு வருத்தம் தெரிவிக்கவேண்டும். அதுவே ஆரோக்கிய அரசியலாக அமையும்.
அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை!