தமிழகம் முழுவதும் திமுக-அதிமுக என்கிற வேறுபாடு இல்லாமல் பல்வேறு கட்சி பிரமுகர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்துள்ளது. மதுரையில் வாக்காளர் பட்டியலும் பணமுமாக இருந்த திமுக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
பல அதிமுகவினர் வீட்டில் வருமான வரி சோதனை நடந்திருக்கிறது. விழுப்புரம் அருகே மயிலம் பகுதியில் வந்த சரக்கு பெட்டக லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 2380 குக்கர்கள் பிடிபட்டன.
சென்னை நீலாங்கரையில் திமுக தலைவர் ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரிதுறையினர் சோதனை நடத்தியது விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. அதை அரசியில் ரீதியாக பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் போடி சட்டசபைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உதவியாளர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருக்கிறார்கள்.
இது போன்று சோதனை நடத்துவதை தவறு என்றோ, உள்நோக்கம் கொண்டது என்றோ விமர்சிக்க முற்பட்டால் தங்கு தடையில்லாத பண வினியோகத்திற்கு அது வழி கோலும்.
தேர்தல் என்பது கொள்கையின் அடிப்படையில் இருந்தது போய் கார்பரேட் வியாபாரமாக மாறி வருகிறதோ என்கிற அச்சம் ஏற்படுகிறது. கையூட்டு கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம் என்று சொல்லுகிறோம்.
வாக்குக்கு பணம் கொடுப்பதும் குற்றம் வாங்குவதும் குற்றம் என்று வறுமை கோட்டுக்கு கீழே வாழும் மக்கள் கணிசமாக இருக்கும் இந்தியாவில் சொல்லி விட முடியாது.
வாக்குகளை அல்ல, அரசியல் கட்சிகள் மக்களை விலை பேசுகின்றன. ஊழலின் ஊற்றுக்கண் தேர்தல்கள் தான் என்பதில் சந்தேகமில்லை.